14வது ஐபிஎல் தொடரில் இரண்டாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபாப் டு பிளெஸிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பேட்டிங்கை துவக்கினர்.
ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே ஃபாப் டு பிளெஸிஸ் டக் அவுட் ஆக, 3வது ஓவரின் முதல் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களுக்கும் வெளியேற சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து மொயின் அலியும், சின்ன தல ரெய்னாவும் ஜோடி சேர்ந்து டெல்லி பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை நொறுக்கினர். ஆட்டத்தின் 9வது ஓவரில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த மொயின் அலியை ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேற்றினார். 24 பந்துகளை சந்தித்த மொயின் அலி 36 ரன்கள் எடுத்தார்.
அம்பதி ராயுடுவுடன் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டதால் சென்னை அணியின் ஸ்கோர் கிடு கிடுவென உயர்ந்தது. கடந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதால் அவரை மிஸ் செய்த சென்னை ரசிகர்களுக்கு தனது அதிரடியான ஆட்டத்தால் விருந்து படைத்தார் சுரேஷ் ரெய்னா.
13வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அரை சதம் கண்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார் சுரேஷ் ரெய்னா. அவர் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருப்பினும் ரசிகர்களை குஷிப்படுத்திய சுரேஷ் ரெய்னா மேலும் 4 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார். கிறிஸ் வோக்ஸ் அவரை ரன் அவுட் செய்தார்.
36 பந்துகளை சந்தித்த சுரேஷ் ரெய்னா 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அடுத்ததாக களத்துக்கு வந்த கேப்டன் தோனி மீது கடுமையான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் உற்சாக துள்ளல் போட்டுக்கொண்டிருந்த நிலையில் 2 பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி ஆவேஷ் கான் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். தோனி அவுட் ஆனதால் சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
16 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 143 ரன்களை குவித்துள்ளது. ஜடேஜா 11 ரன்களுடனும், சாம் கரண் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.