TAMIL
ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி வெளியேற்றம்
ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை – சவுராஷ்டிரா அணிகள் (பி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மும்பை 262 ரன்களும், சவுராஷ்டிரா 335 ரன்களும் எடுத்தன.
73 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை அதிரடியாக ஆடிய மும்பை அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மும்பை அணி 67 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
ஷம்ஸ் முலானி 92 ரன்னில் கேட்ச் ஆனார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 290 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா 83 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.
இதனால் மும்பை அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவர்களின் கனவுக்கு கம்லேஷ் மக்வனாவும், தர்மேந்திர சிங் ஜடேஜாவும் ‘செக்’ வைத்தனர்.
இருவரும் 40 ஓவர்கள் தாக்குப்பிடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினர்.
மும்பை கேப்டன் 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை.
சவுராஷ்டிரா அணி 74 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது, இந்த ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. மக்வானா 31 ரன்களுடனும் (116 பந்து, 5 பவுண்டரி), தர்மேந்திரசிங் ஜடேஜா 33 ரன்களுடனும் (125 பந்து, 5 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர்.
முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் சவுராஷ்டிராவுக்கு 3 புள்ளியும், மும்பைக்கு ஒரு புள்ளியும் கிடைத்தது.
கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் ஆடிய 41 முறை சாம்பியனான மும்பை அணி டிரா கண்டதால் கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
மும்பை அணி இந்த சீசனில் 7 ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி, 2 தோல்வி, 4 டிரா என்று 14 புள்ளியுடன் பின்தங்கிப் போனது.
அதே சமயம் 3 வெற்றி, ஒரு தோல்வி, 3 டிரா என்று 28 புள்ளிகளை சேர்த்துள்ள சவுராஷ்டிரா அணி கால்இறுதியை உறுதி செய்தது.
முன்னதாக டெல்லிக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்த குஜராத் அணியும் (4 வெற்றி, 3 டிராவுடன் 29 புள்ளி) கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.