TAMIL
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ; நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்
இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு 5 இருபது ஓவர் கிரிக்கெட் , 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், நாளை (புதன்கிழமை) இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்த நிலையில், தோள்பட்டை காயம் குணமாகாததால், இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
ஏற்கனவே, 20 ஓவர் கிரிக்கெட் தொடரை முழுமையாக நியூசிலாந்து இழந்த நிலையில், கேன் வில்லியம்சன் விலகியிருப்பது நியூசிலாந்து அணிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸிலாந்து அணிக்கு கேப்டனாக டாம் லதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சேப்மேன் நியூஸிலாந்து ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற 3-வது இருபது ஓவர் போட்டியின் போது நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அடுத்து நடைபெற்ற இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் கேன் வில்லியம்சன் பங்கேற்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.