TAMIL
5வது 20 ஓவர் போட்டியில் நேரஅனுமதி கடந்து பந்துவீச்சு; இந்தியாவுக்கு 20% அபராதம்
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது.
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
முந்தைய ஆட்டத்தில் விளையாடாத ரோகித் சர்மா அணிக்கு திரும்பியதுடன் கேப்டன் பொறுப்பையும் ஏற்றார்.
இந்த போட்டியில் கே.எல். ராகுல் 45 ரன்கள் (33 பந்துகள்), ரோகித் 60 (41 பந்துகள்) எடுத்தனர்.
தொடர்ந்து ஷிவம் துபே 5 (6 பந்துகள்) ரன்களில் வெளியேறினார்.
ஸ்ரேயாஸ் அய்யர் 33 மற்றும் மணீஷ் பாண்டே 11 (4 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
எனினும், தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களே எடுத்தது.
இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது.
தொடரையும் 5-0 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
நியூசிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டியில் நேரஅனுமதி கடந்து பந்து வீசிய இந்திய அணிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஐ.சி.சி.யின் விளையாட்டு வீரர்களுக்கான விதிகளின் பிரிவு 2.22ன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களின் போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்படும்.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ஓவர் ஒன்று அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வீசப்படவில்லை என நேர அனுமதி பரிசீலனையில் தெரிய வந்தது.
இதனை அடுத்து போட்டி நடுவர் கிறிஸ் பிராட் அபராதம் விதித்து உள்ளார்.
இதன்படி இந்திய அணிக்கான போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டது.
போட்டியில் நடந்த இந்த தவறு ரோகித் தரப்பில் ஒப்பு கொள்ளப்பட்டதுடன், விதிக்கப்பட்ட அபராதமும் ஏற்று கொள்ளப்பட்டது.
இதனால் முறைப்படியான விசாரணை நடத்துவதற்கான அவசியம் இல்லாமல் போனது.