TAMIL
இந்திய அணியில் ஜடேஜா விளையாடுவதை எந்த நாடுகளும் விரும்பவில்லை – கிரேம் ஸ்வான்!

இந்தியா அணியில் ஜடேஜா விளையாடுவதை உலகின் மற்ற அனைத்து அணிகளும் விரும்பவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் 2017 இல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பின்னர், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலகி காணப்பட்டனர்.
அவர்களுடைய இடத்தை பிடித்த குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரே பெரும்பாலான போட்டிகளில் கலந்து கொண்டு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா வெளியேறினார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவருக்கு பதிலாக மீண்டும் களமிறங்கிய ஜடேஜா, இந்திய அணிக்கு மிகச்சிறந்தவர் என்பதை சமீப காலங்களில் மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாடி நிரூபிக்க ஆரம்பித்தார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பைக்குப் பின்னர் ரசிகர்கள் அனைவரும் மீண்டும் ஜடேஜாவை ஆச்சர்யத்துடன் பார்க்கும் அளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான், அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்துவீசுவதை உலகின் எந்த அணியும் விரும்பாது என பேசியுள்ளார்.
மேலும், இங்கிலாந்து அணியின் பார்வையில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம் (அவர் விளையாடவில்லை என்றால்) எனவும் கூறியுள்ளார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்