TAMIL

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் 2 ஆட்டங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த இரு ஆட்டங்களில் சூப்பர் ஓவர் வரை போராடி வெற்றியை வசப்படுத்தியது.

இதனால் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது.



இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று
(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த தொடரில் 3, 4-வது ஆட்டங்கள் சமனில் முடிந்து அதன் பிறகு சூப்பர் ஓவருக்கு நகர்ந்தது வியப்புக்குரிய ஒன்றாகும்.

20 ஓவர் தொடர் ஒன்றில் அடுத்தடுத்து இரு ஆட்டங்கள் சமன் ஆனது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

சூப்பர் ஓவரில் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் இந்திய வீரர்கள் பிரமாதப்படுத்தினர்.

நியூசிலாந்து மண்ணில் எந்த ஒரு அணியும் 5-0 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை வென்றதில்லை.

புதிய வரலாறு படைக்கும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

அதே சமயம் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டதால் பரிசோதனை முயற்சிகள் தொடரும் என்று தெரிகிறது.

லோகேஷ் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் சேர்க்கப்படலாம்.

இதே போல் பும்ரா, கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கும் ஓய்வு வழங்கப்படலாம்.

விராட் கோலி இல்லை என்றால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார்.



நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சொந்த ஊரில் அதுவும் 4 முறை டாஸ் ஜெயித்தும் ஒன்றில் கூட வெற்றிக்கனியை பறிக்க முடியாததால் நொந்து போய் உள்ளனர்.

3-வது ஆட்டத்தில் 5 பந்தில் 3 ரன் தான் தேவைப்பட்டது.

4-வது ஆட்டத்தில் கடைசி 4 பந்தில் 3 ரன் தான் தேவையாக இருந்தது.

கைவசம் விக்கெட் இருந்தும் நியூசிலாந்து வீரர்கள் சொதப்பினர்.

கடைசி ஓவர்களில் அவர்கள் ஒன்றிரண்டு ரன்கள் எடுப்பதற்கு பதிலாக அதிரடியாக விளாச முயற்சித்ததாலேயே ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

இது போன்ற தவறுகளுக்கு இன்றைய ஆட்டத்தில் பரிகாரம் தேடும் முனைப்புடன் ஆடுவார்கள்.

இடது தோள்பட்டை வலியால் கடந்த ஆட்டத்தில் ஆடாத நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்த ஆட்டத்துக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மவுன்ட் மாங்கானு நகரை சுற்றி மலைகள் அமைந்துள்ளன.

காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால் பந்து ஸ்விங் ஆக வாய்ப்பு உண்டு.



அதே நேரத்தில் கணித்து ஆடினால் ரன்வேட்டை நடத்தலாம்.

இங்கு இதுவரை நடந்துள்ள 6 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது.

ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. முடிவு கிடைத்த 5 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.

2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் சேர்த்தது இந்த ஸ்டேடியத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது விராட் கோலி, மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே,

வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா அல்லது முகமது ஷமி.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, டிம் செய்பெர்ட், கேன் வில்லியம்சன் அல்லது டாம் புருஸ், ராஸ் டெய்லர், டேரில்



மிட்செல், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, ஹாமிஷ் பென்னட், ஸ்காட் குஜ்ஜெலின்.

இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker