TAMIL
20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியான எவரெஸ்ட் பிரிமீயர் லீக்கில் 40 வயதான கிறிஸ் கெய்ல் – துளிகள்
20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியான எவரெஸ்ட் பிரிமீயர் லீக்கில் கலந்து கொள்ள இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் 40 வயதான கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார்.
பதிவு: ஜனவரி 31, 2020 03:00 AM
* நேபாளம் நாட்டில் நடக்கும் உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியான எவரெஸ்ட் பிரிமீயர் லீக்கில் கலந்து கொள்ள இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் 40 வயதான கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார். பிப்ரவரி 29-ந்தேதி தொடங்கும் இந்த போட்டியில் போக்காரா ரைனோஸ் அணிக்காக அவர் களம் இறங்குகிறார்.
* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த 70-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி.யை வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு அணியில் வெற்றிக்குரிய கோலை நிஷூகுமார் 7-வது நிமிடத்தில் அடித்தார்.
* ஹராரேவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 113 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 4-வது நாளான நேற்றைய முடிவில் 7 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பிரன்டன் டெய்லர் 67 ரன்கள் எடுத்தார். மழை மற்றும் போதிய வெளிச்சம் இன்மையால் நேற்று 35 ஓவர்கள் வீச முடியாமல் போனது. ஜிம்பாப்வே இதுவரை 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் கடைசி நாளான இன்று அதே ஸ்கோருடன் டிக்ளேர் செய்து இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* மார்ச் மாதம் இறுதியில் பாகிஸ்தானுக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுவது குறித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது. இதையொட்டி பாதுகாப்பு குழுவை அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு அனுப்பி ஆய்வு செய்ய தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
* இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 54.1 ஓவர்களில் 216 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக சுப்மான் கில் 83 ரன்னும், ஹனுமா விஹாரி 51 ரன்னும் எடுத்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 33 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.