TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அதே ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மார்டின் கப்தில்-காலின் முன்ரோ ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
6 வது ஓவரில் மார்டின் கப்தில்(33 ரன்கள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்ததையடுத்து, நியுசிலாந்து அணியின் ரன் வேகம் குறைய துவங்கியது.
காலின் முன்ரோ 26 ரன்களிலும், கேன் வில்லியம்சன் (கேப்டன்) 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் அதிகபட்சமாக டிம் செய்பெர்ட் 33 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது .
இதனை தொடர்ந்து 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.