TAMIL

2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 269 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 223 ரன்களும் எடுத்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதன் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு 438 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



அடுத்து இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது.

பீட்டர் மலான் (63 ரன்), கேஷவ் மகராஜ் (2 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று தென்ஆப்பிரிக்க வீரர்கள் டிரா செய்யும் முனைப்புடன் பேட்டிங் செய்தனர்.

இருப்பினும் சீரான இடைவெளியில் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட் விழுந்தது.

மகராஜ் 2 ரன்னிலும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 19 ரன்னிலும், பீட்டர் மலான் 84 ரன்னிலும் (288 பந்து) பெவிலியன் திரும்பினர்.

இதன் பின்னர் வான்டெர் துஸ்செனும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும் இணைந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு நேரத்தை கடத்தினர்.

இதனால் ஆட்டம் டிராவை நோக்கி செல்வது போல் தோன்றியது. கிட்டத்தட்ட 34 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்த கூட்டணி முக்கியமான கட்டத்தில் உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது.



குயின்டான் டி காக் 50 ரன்களில் (107 பந்து) கேட்ச் ஆனார்.

வான்டெர் துஸ்சென் 17 ரன்னில் (140 பந்து) வீழ்ந்தார். தொடர்ந்து, கடைசி 3 விக்கெட்டுகளை வரிசையாக பென் ஸ்டோக்ஸ் கபளகரம் செய்தார்.

தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 137.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இன்னும் 8.2 ஓவர்கள் அந்த அணி தாக்குப்பிடித்திருந்தால் போட்டி டிராவில் முடிந்திருக்கும்.

இதன் மூலம் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 4 போட்டி கொண்ட இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ டென்லி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆல்-ரவுண்டராக அசத்திய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.



இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய 30 புள்ளிகளை இங்கிலாந்து தட்டி சென்றது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 16-ந்தேதி போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker