TAMIL
ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வென்று கொடுத்த பிரபல வீரர் ஓய்வு அறிவிப்பு
ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்ல காரணமாக இருந்த வீரர் ஷதாப் ஜகாதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஷதாப் ஜகாதி ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளதோடு, கோவா மாநில அணிக்காக தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
எனினும், இந்திய அணியில் இதுவரை இடம் பெற்றதில்லை. ஐபிஎல் மூலம் புகழ் பெற்ற அவர், கடந்த ஓராண்டாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2009 சீசனில் அவரை அறிமுகம் செய்தது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார் ஜகாதி.
பின்னர், ஜகாதி 2010 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதை பயன்படுத்தி சிஎஸ்கே அணி அந்த தொடரில் கோப்பை வென்றது.
அப்போட்டியில் சென்னை அணி 168 ரன்கள் குவித்தது. அடுத்து மும்பை அணி சேஸிங் செய்தது. மும்பை அணியின் அப்போதைய தலைவர் சச்சின் டெண்டுல்கர் 3 விக்கெட்கள் இழந்த மும்பை அணியை காப்பாற்ற வேண்டிய நிலையில் பேட்டிங் செய்து வந்தார்.
அப்போது 15வது ஓவரை வீசினார் ஷதாப் ஜகாதி. அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சச்சின் விக்கெட்டையும், ஐந்தாவது பந்தில் சௌரப் திவாரி விக்கெட்டையும் வீழ்த்தி பெரிய திருப்புமுனை அளித்தார்.
சச்சின் விக்கெட் தான் அந்த தொடரில் சென்னை கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.
அந்த தருணம் தான் தன் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த தருணம் என ஓய்வை அறிவித்த பின் ஜகாதி குறிப்பிட்டுள்ளார்.