IPL TAMILTAMIL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது – சாய் கிஷோர் பேட்டி

அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் 3 தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னையை சேர்ந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளரான 21 வயது எம்.சித்தார்த்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கி இருக்கிறது.

ஐ.பி.எல். போட்டியில் முதல் முறையாக அடியெடுத்து வைக்கும் கனவுடன் காத்திருக்கும் சித்தார்த் கூறுகையில் ‘ஐ.பி.எல். போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.


ஐ.பி.எல். போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் போன்ற சிறந்த வீரர்களின் ஆட்டத்தை பார்த்து வளர்ந்தவன் நான்.

தற்போது அவர்களுடன் இணைந்து விளையாட கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து ஆட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்றார்.

சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோரை முதலில் எந்த அணியும் எடுக்கவில்லை.

2-வது முறையாக அவரது பெயரை ஏலத்தில் வாசித்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு சொந்தமாக்கியது.


மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி வளர்ந்து வரும் வீரரான 23 வயதான சாய் கிஷோர் தனது ஐ.பி.எல். வாய்ப்பு குறித்து கூறுகையில் ‘ஐ.பி.எல். போட்டிக்கான அணியில் ஏதாவது ஒன்றில் எனக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வாகி இருப்பது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.

ஐ.பி.எல். போட்டியில் அங்கம் வகிக்க கிடைத்த வாய்ப்பை கடின உழைப்புக்கு கிடைத்த பலனாக கருதுகிறேன்.

கிரிக்கெட் சகாப்தமான டோனியுடன் பேச கிடைத்து இருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்பொழுதும் வலுவானதாகும்.

அந்த அணியினருடன் இணைந்து ஆடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.


என்னை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் அணியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை அளிப்பேன்’ என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த சில மாதங்களாக நான் பல போட்டிகளில் விளையாடவில்லை.

இதனால் அதிக தொகைக்கு ஏலத்தில் போவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

எனது அடிப்படை விலைக்கு (ரூ.30 லட்சம்) எடுக்கப்படலாம் என்று தான் நினைத்தேன்.

தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாட தொடங்கி இருக்கிறேன். இந்த சீசனில் எல்லா ஆட்டங்களிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.


எனது சொந்த மாநிலத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைமையின் கீழ் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தினேஷ் கார்த்திக் மற்றும் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயருக்கு நன்றி’ என்றார்.

ஏற்கனவே ஆர்.அஸ்வின் (டெல்லி), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), விஜய் சங்கர் (ஐதராபாத்), வாஷிங்டன் சுந்தர் (பெங்களூரு),
முரளி விஜய் (சென்னை), டி.நடராஜன் (ஐதராபாத்), ஜெகதீசன் (சென்னை), முருகன் அஸ்வின் (பஞ்சாப்) ஆகிய தமிழர்கள்
அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

எனவே அடுத்த (2020) ஐ.பி.எல். போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் விளையாட இருக்கிறார்கள்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker