TAMIL
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி முன்னிலை
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 191 ரன்னில் சுருண்டது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி தொடக்க நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 85.5 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 80 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்வரிசை வீரர்களான தினேஷ் சன்டிமால் (74 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (32 ரன்), தில்ருவான் பெரேரா (48 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பு இலங்கையின் முன்னிலைக்கு வித்திட்டது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி 5 விக்கெட்டுகளும், முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
80 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது.
ஷான் மசூத் 21 ரன்னுடனும், அபித் அலி 32 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.