TAMIL
இந்திய அணியில் மீண்டும் அதிரடி மாற்றம்… நட்சத்திர வீரர் வெளியேற்றம்
இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து தீபக் சாஹர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் டி-20 தொடரை இழந்த நிலையில், ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.
இரண்டு ஒரு நாள் போட்டிகள் முடிந்த நிலையில் 1-1 என தொடர் சமனில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டி டிசம்பர் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்டாக்கிலுள்ள பராபதி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இது இரு அணிகளுக்கும் கட்டாயம் வெல்ல வேண்டிய ஒரு போட்டியாக இருக்கும்.
விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு பின்னர் சாஹர் தனது முதுகில் லேசான வலியை உணர்ந்தார்.
இதன் காரணமாக முழுமையாக குணமடையும் வரை சாஹரை ஓய்வெடுக்கும் படி பி.சி.சி.ஐ மருத்துவக் குழுவால் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் சாஹர் பங்கேற்க மாட்டார்.
ஒரு நாள் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு சாஹருக்கு பதிலாக டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, முதல் ஒருநாள் போட்டிக்கு பின் ஏற்பட்ட காயம் காரணமாக புவனேஷ்வர் விலகினார். அவர் இல்லாத நிலையில் முகமது ஷமியுடன் வேகப்பந்து வீச்சாளர் துறைக்கு தலைமை தாங்கினார் சஹார்.
இப்போது, இறுதி ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாகூர், சைனி மற்றும் ஷமி ஆகியோரை இந்திய அணி நம்பியுள்ளது.
3வது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், சிவம் துபே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யூஸ்வேந்திர சஹால் , முகமது ஷமி, ஷார்துல் தாக்கூர், நவ்தீப் சைனி.