TAMIL

பெர்த் டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி 166 ரன்னில் சுருண்டது – வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பிங்க் பந்து டெஸ்ட்) உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் பாலோ- ஆனை தவிர்க்க மொத்தம் 217 ரன்கள் எடுத்தாக வேண்டிய நெருக்கடியுடன் நியூசிலாந்து அணி வீரர்கள் 3-வது



நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்தனர்.

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 55.2 ஓவர்களில் 166 ரன்களில் முடங்கி ‘பாலோ-ஆன்’ ஆனது.

அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்கள் (134 பந்து, 9 பவுண்டரி) சேர்த்தார்.

முன்னதாக நியூசிலாந்து வீரர் காலின் கிரான்ட்ஹோமின் (23 ரன்) விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய எகிறி வந்த பந்தை கிரான்ட்ஹோம் கொஞ்சம் துள்ளி குதித்து தடுக்க முற்பட்டார்.

பந்து அவரது கையுறையை (குளோவ்ஸ்) ஒட்டியபடி கடந்து ஹெல்மெட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்ற ஸ்டீவன் சுமித்தின் கையில் விழுந்தது.



சில நிமிட யோசனைக்கு பிறகு நடுவர் அலிம் தார் விரலை உயர்த்தினார்.

நடுவரின் முடிவை எதிர்த்து கிரான்ட்ஹோம் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தார். டி.வி. ரீப்ளேயில் பந்து அவரது கையுறையில் உரசியது போல் தெரியவில்லை.

‘ஸ்னிக்கோ’ தொழில்நுட்பத்திலும் பந்து கையுறையில் பட்டதற்கான அறிகுறியை காட்டவில்லை.

இருப்பினும் 3-வது நடுவர் மரைஸ் எராஸ்மஸ், கள நடுவரின் முடிவை மாற்றும் அளவுக்கு தீர்க்கமான ஆதாரம் இல்லை என்று கூறி கிரான்ட்ஹோமின் அவுட்டை உறுதி செய்தார்.

இதனால் கிரான்ட்ஹோம் அதிருப்தியுடன் வெளியேறினார்.

மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், நாதன் லயன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



அடுத்து நியூசிலாந்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காத ஆஸ்திரேலியா 250 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 19 ரன்களில் கேட்ச் ஆனார்.

அவர் டெஸ்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்த 12-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையோடு நடையை கட்டினார்.

இதன் பின்னர் ஜோ பர்ன்ஸ் (53 ரன்), மார்னஸ் லபுஸ்சேன் (50 ரன்) அரைசதம் அடித்து வலுவான முன்னிலைக்கு வித்திட்டனர்.

அதே சமயம் ஸ்டீவன் சுமித் (16 ரன்), டிராவிஸ் ஹெட் (5 ரன்), கேப்டன் டிம் பெய்ன் (0) நியூசிலாந்தின் வேகத்தில் எளிதில் வீழ்ந்தனர்.



3-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 57 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து மொத்தம் 417 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிம் சவுதி 4 விக்கெட்டுகளும், நீல் வாக்னெர் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஆனால் சிறிய பின்னடைவாக தசைப்பிடிப்பால் அவதிப்படும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 2-வது இன்னிங்சில் பந்து வீசமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் பெற்றார்.



2019-ம் ஆண்டில் அவர் 10 டெஸ்டில் விளையாடி 3 சதம், 6 அரைசதம் உள்பட 1,022 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த வகையில் 2-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்தும் (873 ரன்), 3-வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் (774 ரன்) உள்ளனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker