TAMIL
பார்முலா1 கார்பந்தயம்: கடைசி சுற்று போட்டியில் ஹாமில்டன் முதலிடம்
இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயத்தில் 21-வது மற்றும் கடைசி சுற்று போட்டியாக அபுதாபி கிராண்ட்பிரி அங்குள்ள யாஸ் மரினாவில் நேற்று நடந்தது. இதில் 305.355 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 34 நிமிடம் 05.715 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்து, அதற்குரிய 26 புள்ளிகளையும் வசப்படுத்தினார். இந்த சீசனில் அவரது 11-வது வெற்றி இதுவாகும். அவரை விட 16.772 வினாடி பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகள் பெற்றார். முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சில சுற்றுகளுக்கு முன்பே தனது 6-வது பார்முலா1 ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை உறுதி செய்து விட்ட ஹாமில்டன் 21 சுற்றுகள் நிறைவில் 413 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 326 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், வெர்ஸ்டப்பென் 278 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பெற்றனர்.