TAMIL
பகல்-இரவு டெஸ்டில் பாகிஸ்தான் திணறல்: ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா மழை பாதிப்புக்கு மத்தியில் ரன்மழை பொழிந்தது. தொடக்க நாளில் ஆஸ்திரேலியா 73 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 166 ரன்களுடனும், மார்னஸ் லபுஸ்சேன் 126 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முழுமையாக கோலோச்சினர். பாகிஸ்தானின் பந்து வீச்சை துவம்சம் செய்த வார்னர், ஒரு நாள் போட்டி போன்று மளமளவென ரன்களை சேகரித்தார்.
அணியின் ஸ்கோர் 369 ரன்களாக உயர்ந்த போது, லபுஸ்சேன் 162 ரன்களில் போல்டு ஆனார். வார்னர்-லபுஸ்சேன் கூட்டணி 2-வது விக்கெட்டுக்கு 361 ரன்கள் திரட்டியது. 2-வது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய ஜோடி ஒன்று எடுத்த 2-வது அதிகபட்சம் இதுவாகும்.
அடுத்து முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் வந்தார். மறுமுனையில் இரட்டை சதத்தை கடந்த வார்னருக்கு அதிர்ஷ்ட தேவதையின் கருணையும் கிடைத்தது. வார்னர் 226 ரன்களில் இருந்த போது, புதுமுக வீரர் முகமது மூசாவின் பந்து வீச்சில் ‘கல்லி’ திசையில் நின்ற பாபர் அசாமிடம் பிடிபட்டார். ஆனால் ‘ரீப்ளே’யில் முகமது மூசா தனது காலை கிரீசுக்கு வெளியே வைத்து நோ-பாலாக வீசியது தெரிய வந்ததால், வார்னருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
இந்த பொன்னான வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட வார்னர் ‘டிரிபிள் செஞ்சுரி’ நோக்கி விசுவரூபம் எடுத்தார். இதற்கிடையே, சுமித் தனது பங்குக்கு 36 ரன்கள் (64 பந்து, 2 பவுண்டரி) எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து மேத்யூ வேட் நுழைந்தார். அவரது ஒத்துழைப்புடன் வார்னர் பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து தனது முதலாவது முச்சதத்தை பூர்த்தி செய்தார். முச்சதம் அடித்த 7-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமைக்கும் உரியவர் ஆனார்.
வார்னர் தனது முதலாவது 100 ரன்களை 156 பந்துகளிலும், 2-வது 100 ரன்களை 104 பந்துகளிலும் எஞ்சிய 135 ரன்களை 158 பந்துகளிலும் எடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவின் பந்துவீச்சை தெறிக்கவிட்ட வார்னர் அவரது பந்து வீச்சில் மட்டும் 110 பந்துகளில் 111 ரன்களை திரட்டினார்.
ஆஸ்திரேலிய ‘சகாப்தம்’ டான் பிராட்மேனின் உச்சப்பட்ச ஸ்கோரான 334 ரன்களை வார்னர் முந்தியதும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். இதன்படி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 127 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 589 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பகல்-இரவு டெஸ்டில் ஒரு அணியின் அதிகபட்சம் இது தான். வார்னர் 335 ரன்களுடனும் (418 பந்து, 39 பவுண்டரி, ஒரு சிக்சர்), மேத்யூ வேட் 38 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்டிங் முதுகெலும்பை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் உடைத்தார். இமாம் உல்-ஹக் (2 ரன்), கேப்டன் அசார் அலி (9 ரன்), ஆசாத் ஷபிக் (9 ரன்), முகமது ரிஸ்வான் (0) ஆகியோர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
நேற்றைய முடிவில் பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 96 ரன்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்தது. பாபர் அசாம் 43 ரன்னுடனும், யாசிர் ஷா 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
ஆஸ்திரேலிய வீரரின் 2-வது அதிகபட்சம்
பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் 335 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் 33 வயதான டேவிட் வார்னர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் ஓராண்டு தடையையும், அவமதிப்புகளையும் சந்தித்த வார்னர், ஒரே நாளில் மீண்டும் ஹீரோ அந்தஸ்தை எட்டி விட்டார். அவரது முச்சதத்தின் மூலம் உருவான சாதனை விவரம் வருமாறு:-
* 142 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் அடிக்கப்பட்ட 31-வது முச்சதம் இதுவாகும். 8 நாடுகளை சேர்ந்த 27 பேட்ஸ்மேன்கள் முச்சதம் அடித்து இருக்கிறார்கள். இதில் டான் பிராட்மேன், பிரையன் லாரா, ஷேவாக், கிறிஸ் கெய்ல் தலா 2 முறை 300 ரன்களை கடந்ததும் அடங்கும்.
* வார்னரின் ஸ்கோர் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் 2-வது அதிகபட்சமாகும். பெர்த்தில் 2003-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்த டெஸ்டில் மேத்யூ ஹைடன் 380 ரன்கள் சேர்த்ததே ஆஸ்திரேலிய வீரரின் தனிநபர் அதிகபட்சமாக நீடிக்கிறது.
* அடிலெய்டில் 1884-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நூற்றாண்டு கால பாரம்பரியமிக்க இந்த மைதானத்தில் முச்சதத்தை பதிவு செய்த முதல் வீரர் வார்னர் தான். 1932-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பிராட்மேன் 299* ரன்கள் எடுத்ததே இங்கு முந்தைய சிறந்த ஸ்கோராக இருந்தது.
* பகல்-இரவு டெஸ்டில் எடுக்கப்பட்ட 2-வது முச்சதமாகும். ஏற்கனவே பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி 2016-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ‘பிங்க்’ நிற பந்தில் முச்சதம் (302 ரன்) அடித்திருக்கிறார்.
* 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் கருண்நாயர் 303 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு தற்போது தான் முச்சதம் வந்துள்ளது.