TAMIL
2023-ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டி – ஒடிசாவில் நடைபெறும்
15-வது ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் உரிமத்தை சமீபத்தில் இந்தியா பெற்றது. இந்த நிலையில் இந்தியாவில் இந்த போட்டி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ‘2018-ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டியை நாங்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். இப்போது 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி மீண்டும் புவனேசுவரம் மற்றும் ரூர்கேலாவில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்’ என்றார். நிகழ்ச்சியில் சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் நரிந்தர் பத்ரா, ஆக்கி இந்தியா தலைவர் முகமது முஷ்டாக் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.