TAMIL
அடுத்த வருட ஐ.பி.எல்லுக்கு பின் வருங்காலம் பற்றி டோனி முடிவு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி ஓய்வு பெறுவது பற்றி பல்வேறு கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலையில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி வெளியேறியது.
ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி, இதன்பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடாமல் ஓய்வு பெறும் முடிவில் இருந்து வருகிறார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மற்றும் தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திற்கு எதிராக உள்ளூரில் நடந்த போட்டி தொடர்களிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்த சூழ்நிலையில் அவருக்கு நெருங்கிய வட்டாரம் வெளியிட்டுள்ள தகவலில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்கு பின்பே தனது வருங்காலம் பற்றி அவர் முடிவு செய்திடுவார். அவர் ஒரு பெரிய விளையாட்டு வீரர். அதனால் அவரை சுற்றி யூகங்கள் வரும். அதனை நிறுத்த முடியாது.
கடந்த ஒரு மாதம் வரை அவர் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு சிறந்த உடற்தகுதியுடன் இருக்கிறார். எனினும் ஐ.பி.எல். போட்டிக்கு முன் எத்தனை போட்டி தொடர்களில் விளையாடுவார் என்பது பற்றி அவரே முடிவு செய்ய உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வருகிற டிசம்பர் 6ந்தேதி உள்ளூரில் தொடங்கவுள்ள 3 டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் ஆகியவற்றிலும் அவர் விளையாடவில்லை.