TAMIL
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: சரிவில் இருந்து மீண்டது நியூசிலாந்து
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 353 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. ஹென்றி நிகோல்ஸ் 26 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் வாட்லிங் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். ஹென்றி நிகோல்ஸ் 41 ரன்னில் ஜோரூட் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அடுத்து ஆல்-ரவுண்டர் காலின் டி கிரான்ட்ஹோம், வாட்லிங்குடன் இணைந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து காப்பாற்றியதுடன் 300 ரன்களையும் கடக்க வைத்தனர். அணியின் ஸ்கோர் 316 ரன்களை எட்டிய போது, கிரான்ட்ஹோம் (65 ரன்கள்) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் மிட்செல் சான்ட்னெர் களம் கண்டார்.
நிலைத்து நின்று ஆடிய வாட்லிங் 251 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் அடித்த 8-வது சதம் இதுவாகும். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 141 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 394 ரன்கள் சேர்த்துள்ளது. வாட்லிங் 119 ரன்னுடனும், மிட்செல் சான்ட்னெர் 31 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
முதல் இன்னிங்சில்இங்கிலாந்தை விட நியூசிலாந்து அணி இதுவரை 41 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.