TAMIL

பார்முலா1 கார் பந்தயம்: பிரேசில் கிராண்ட்பிரி போட்டியில் வெர்ஸ்டாப்பென் முதலிடம்

கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமானது பார்முலா 1 பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த போட்டியின் 20-வது சுற்றான பிரேசில் கிராண்ட்பிரி போட்டி சாவ்பாலோவில் நேற்று முன்தினம் நடந்தது. 305.909 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 33 நிமிடம் 14.678 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். பிரான்ஸ் வீரர் பியர்ரி காஸ்லி (டோரோ ரோஸ்சோ அணி) 2-வது இடம் பெற்றார். கடந்த சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டியிலேயே 6-வது சாம்பியன் பட்டத்தை உறுதி செய்து விட்ட இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் ரெட்புல் அணி வீரர் அலெக்சாண்டர் அல்போனின் காரை பந்தயத்தில் இடித்து தள்ளியதால் அவருக்கு போட்டி நடுவர் குழு 5 வினாடிகள் அபாரதமாக விதித்தது. இதனால் அவர் 3-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். எனவே அவருக்கு அடுத்தபடியாக வந்த ஸ்பெயின் வீரர் கார்லோஸ் சைன்ஸ் (மெக்லரன் அணி) 3-வது இடத்துக்கு முன்னேறினார். 20-வது சுற்று முடிவில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 387 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். பின்லாந்து வீரர் வால்ட்டெரி போட்டஸ் 314 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். 21-வது மற்றும் கடைசி சுற்றான ஐக்கிய அரபு அமீரக கிராண்ட்பிரி போட்டி அபுதாபியில் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது.


Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker