TAMIL
களத்தில் எதிரணி வீரரை திட்டிய பேட்டின்சனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன், அங்கு உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிய போது சர்ச்சையில் சிக்கினார். கோபத்தில் எதிரணி வீரர் கேமரூன் கனோனை தனிப்பட்ட முறையில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தார். இதை நடுவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை விதிமுறைப்படி ஒரு வீரர் மீது தனிப்பட்ட விஷயம் குறித்து வசைமாரி பொழிவது விதிமீறலாகும். இதையடுத்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பேட்டின்சனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது. இதனால் வருகிற 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவரால் விளையாட முடியாது.
ஒரு வேகத்தில் அவரை திட்டிவிட்டதாகவும், தவறு என்பதை உணர்ந்ததும் உடனடியாக எதிரணி வீரர்களிடமும், நடுவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் பேட்டின்சன் தெரிவித்தார். 29 வயதான பேட்டின்சன் ஆஸ்திரேலிய அணிக்காக 19 டெஸ்டுகளில் விளையாடி 75 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.