TAMIL
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வென்றது வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதலாவது ஒரு நாள் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ரமத் ஷா (61 ரன்), இக்ரம் அலிகில் (58 ரன்), அஸ்ஹார் ஆப்கன் (35 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். கேப்டன் ரஷித்கான் டக்-அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜாசன் ஹோல்டர், ஷெப்பர்டு, ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6 ரன்னில் ‘கன்னி’ சதத்தை நழுவ விட்ட ரோஸ்டன் சேஸ் 94 ரன்களில் (115 பந்து, 11 பவுண்டரி) கேட்ச் ஆனார். விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 77 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக சந்தித்த 10-வது தோல்வி இதுவாகும். 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.