TAMIL
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதிக்கு முன்னேறும் அணிகள் – கில்கிறிஸ்ட் கணிப்பு
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்டிடம், அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், ‘ அனேகமாக இந்திய அணி அரைஇறுதி அல்லது இறுதிப்போட்டிக்கு வந்து விடும். கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை என்னால் கணிக்க முடியாது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன். 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான பாகிஸ்தானையும் புறந்தள்ளி விட முடியாது. ஆனால் 20 ஓவர் கிரிக்கெட் லாட்டரி போன்றது. எனவே கடைசி ரன் எடுக்கும் வரையோ அல்லது கடைசி விக்கெட் விழும் வரையோ வெற்றியாளராக கணிப்பது கடினம்’ என்றார்.