TAMIL

இந்திய டென்னிஸ் அணிக்கு திரும்புகிறார், லியாண்டர் பெயஸ்

இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணிக்கு மூத்த வீரர் லியாண்டர் பெயஸ் திரும்புகிறார்.

பாகிஸ்தானில் டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அடுத்த மாதம் 29, 30-ந்தேதிகளில் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியை பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற இந்திய டென்னிஸ் சம்மேளனத்தின் கோரிக்கையை உலக டென்னிஸ் சங்கம் நிராகரித்து விட்டது. பாதுகாப்பு அச்சம் காரணமாக ரோகன் போபண்ணா, ராம்குமார், சுமித் நாகல், சசிகுமார் முகுந்த் உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து விட்டனர். மற்றொரு முன்னணி வீரர் சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு நவம்பர் 29-ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதால் அவரால் விளையாட இய லாது.



களம் இறங்காமல் வெளியில் இருந்து அணியை வழிநடத்தும் கேப்டன் மகேஷ் பூபதியும் பாகிஸ்தானுக்கு செல்வது சவுகரியமாக இருக்காது என்று கூறி பின்வாங்கி விட்டார். இதனால் 2-ம் தர இந்திய அணியையே பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

லியாண்டர் பெயஸ் தயார்

இந்த நிலையில் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணிக்கு மூத்த வீரர் லியாண்டர் பெயஸ் திரும்புகிறார். இது குறித்து இந்திய டென்னிஸ் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜீ கூறுகையில், ‘விசா பெறுவதற்கான நடைமுறைகளை தொடங்கும்படி உலக டென்னிஸ் சங்கம் கேட்டுக் கொண்டது. இதனால் நாங்கள் லியாண்டர் பெயஸ் உள்பட சில வீரர்களின் பெயர்களை அனுப்பியுள்ளோம். இந்த போட்டி புல்தரை ஆடுகளத்தில் நடக்கிறது. புல்தரை ஆடுகளத்தில் விளையாடுவதில் பெயஸ் கில்லாடி. அணியை நாங்கள் விரைவில் தேர்வு செய்வோம். லியாண்டர் பெயஸ் அணியில் நிச்சயம் விளையாடாத கேப்டனாக இருக்கமாட்டார். ஏனெனில் அவர் இன்னும் ஓய்வு பெறவில்லை. தொடர்ந்து விளையாடி வருகிறார். முதலில் நாங்கள் அணியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு தேர்வு கமிட்டி கேப்டனை முடிவு செய்யும்’ என்றார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற பெருமைக்குரிய 46 வயதான லியாண்டர் பெயஸ் கடைசியாக 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் ஆடியிருந்தார்.

சகெத் மைனெனி, அர்ஜூன் காதே, விஜய் சுந்தர் பிரசாந்த், ஸ்ரீராம் பாலாஜி, சித்தார்த் ரவத், மனிஷ் சுரேஷ் குமார் போன்ற இளம் வீரர்களும், பயிற்சியாளர் ஜீஷன் அலியும் பாகிஸ்தானில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker