TAMIL
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:எல்கர், டி காக் சதத்தால் சரிவை சமாளித்தது தென்ஆப்பிரிக்கா
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் டீன் எல்கர், டி காக் சதத்தால் தென்ஆப்பிரிக்க அணி சரிவை சமாளித்து 385 ரன்கள் குவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மயங்க் அகர்வால் இரட்டை செஞ்சுரியும் (215 ரன்), ரோகித் சர்மா சதமும் (176 ரன்) விளாசினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 39 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. டீன் எல்கர் 27 ரன்களுடனும், டெம்பா பவுமா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்க வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். சிறிது நேரத்தில் பவுமா (18 ரன்) இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அடுத்து டீன் எல்கருடன், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கைகோர்த்தார். பிளிஸ்சிசை சுற்றி அரண் போல் பீல்டர்களை நிறுத்தி, கேப்டன் கோலி சுழற்பந்து வீச்சு தாக்குதல் மூலம் நெருக்கடி கொடுத்தார். ஆனால் அஸ்வினின் ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரி ஓட விட்ட பிளிஸ்சிஸ், இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக சமாளித்து பீல்டிங் வியூகத்தை தகர்த்தார். மறுமுனையில் டீன் எல்கரின் ஆதிக்கம் நீடித்தது. ஜடேஜாவின் ஒரே ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டியடித்து திகைக்க வைத்தார். இதனால் தென்ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டது.
எல்கர் சதம்
அணியின் ஸ்கோர் 178 ரன்களாக உயர்ந்த போது, பிளிஸ்சிஸ் (55 ரன், 103 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் ‘லெக் ஸ்லிப்’பில் நின்ற புஜாராவிடம் கேட்ச் ஆனார். 6-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் வந்த வேகத்தில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் 7 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை பேட்ஸ்மேனின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ரோகித் சர்மா நழுவ விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட டி காக் அதிரடியில் வெளுத்து வாங்கினார். அஸ்வின் ஓவரில் 2 பவுண்டரி, ஜடேஜாவின் ஓவரில் சிக்சர், பவுண்டரி என்று சாத்தினார்.
இன்னொரு பக்கம் டீன் எல்கர், அஸ்வின் பந்து வீச்சில் பிரமாதமான ஒரு சிக்சரை பறக்க விட்டு தனது 12-வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவுக்கு எதிராக அவரது முதல் சதமாகும். எல்கர்-டி காக் ஜோடி நிலைத்து நின்று ஆடியதுடன் 303 ரன்களை கடக்க வைத்து ‘பாலோ-ஆன்’ ஆபத்தையும் தவிர்த்தது. பிற்பகலில் மேகமூட்டமான வானிலை காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் மின்னொளியின் கீழ் தான் போட்டி நடந்தது. ஆனால் அதன் தாக்கத்தை பந்து வீச்சில் பெரிய அளவில் பார்க்க முடியவில்லை.
டி காக் 111 ரன்
வலுவாக காலூன்றிய இந்த கூட்டணியை ஒரு வழியாக சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா உடைத்தார். அணியின் ஸ்கோர் 342 ரன்களை எட்டிய போது, டீன் எல்கர் ஜடேஜாவின் பந்து வீச்சை முட்டிப்போட்டு விளாசிய போது, அதை புஜாரா கேட்ச் செய்தார். எல்கர் 160 ரன்களில் (287 பந்து, 18 பவுண்டரி, 4 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.
டீ காக்கும், எல்கர் பாணியில் அஸ்வினின் பந்து வீச்சில் பந்தை சிக்ருக்கு அனுப்பி தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார். பிறகு அஸ்வினின் சுழல் வலையிலேயே சிக்கினார். அஸ்வின் பந்து வீச்சை டி காக் (111 ரன், 163 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) தடுத்து ஆட முற்பட்ட போது பந்து அவரது காலுறையில் உரசிய படி ஸ்டம்பையும் பதம் பார்த்தது. அடுத்து வந்த பிலாண்டர் (0) தாக்குப்பிடிக்கவில்லை.
தென்ஆப்பிரிக்கா 385 ரன்
3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 385 ரன்கள் சேர்த்துள்ளது. செனுரன் முத்துசாமி (12 ரன்), கேஷவ் மகராஜ் (3 ரன்) அவுட் ஆகாமல் உள்ளனர். இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தென்ஆப்பிரிக்க அணி இன்னும் 117 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்க உள்ளது. எஞ்சிய இரு விக்கெட்டையும் வீழ்த்தி விட்டு அதன் பிறகு இந்திய அணி 2-வது இன்னிங்சில் வேகமாக விளையாடி சவாலான இலக்கை எதிரணிக்கு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.