TAMIL
உலக தடகளம்:400 மீட்டர் ஓட்டத்தில் பக்ரைன் வீராங்கனை முதலிடம்
உலக தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பக்ரைன் வீராங்கனை சல்வா எய்ட் நாசர் முதலிடம் பிடித்தார்.
பக்ரைன் வீராங்கனை அசத்தல்
17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதி சுற்றில் 9 வீராங்கனைகள் களம் கண்டனர். இந்த போட்டியில் பக்ரைன் வீராங்கனை சல்வா எய்ட் நாசர் 48.14 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதல்முறையாக தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். 21 வயதான சல்வா எய்ட் நாசர் இதற்கு முன்பு இந்த தூரத்தை 49.08 வினாடியில் கடந்ததே அவரது தனிப்பட்ட சிறந்த செயல்பாடாக இருந்தது. 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலக்கை அதிவேகமாக கடந்த 3-வது வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஒலிம்பிக் சாம்பியனான பகாமஸ் வீராங்கனை ஷானே மில்லர் உய்போ 48.37 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், ஜமைக்கா வீராங்கனை ஷெரிகா ஜாக்சன் 49.47 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
குண்டு எறிதலில் சீன வீராங்கனை கோங் லிஜியாவ் 19.55 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை மீண்டும் கைப்பற்றினார். அவர் 2017-ம் ஆண்டிலும் தங்கம் வென்று இருந்தார். இதன் மூலம் உலக போட்டியில் குண்டு எறிதலில் தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற 4-வது வீராங்கனை என்ற சிறப்பை கோங் லிஜியாவ் பெற்றார். ஜமைக்கா வீராங்கனை டேனியல் தாமஸ் டுட் (19.47 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனி வீராங்கனை கிறிஸ்டினா ஸ்வானிட்ஸ் (19.17 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இந்திய வீரர்கள் ஏமாற்றம்
நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் தடை ஓட்டம் உள்பட 7 பந்தயங்களை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை கேத்ரினா ஜான்சன் தாம்சன் (6,981 புள்ளிகள்) தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். உலக போட்டியில் கடந்த 32 ஆண்டுகளில் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் பெற்ற பெரிய வெற்றி இதுவாகும். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான பெல்ஜியம் வீராங்கனை நபிசாடோ திம் (6,677 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், ஆஸ்திரியா வீராங்கனை வெர்னா பிரினிர் (6,560 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதி சுற்றில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் (3:39.86 வினாடி) தனது பிரிவில் 10-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார். இதேபோல் குண்டு எறிதலில் தகுதி சுற்றில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் (20.43 மீட்டர்) தனது பிரிவில் 8-வது இடம் பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார். 10 பந்தயங்களை உள்ளடக்கிய டெக்கத்லான் போட்டியில் 21 வயதான ஜெர்மனி வீரர் நிக்லாஸ் கால் (8,691 புள்ளிகள்) தங்கப்பதக்கத்தை முதல்முறையாக தட்டிச்சென்றார். இதன் மூலம் குறைந்த வயதில் டெக்கத்லான் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனைக்குரியவர் ஆனார்.
அப்பீலில் கிடைத்தது வெண்கலம்
முன்னதாக நடந்த ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் ஒமார் மெக்லியோட் தசைப்பிடிப்பு காரணமாக ஓடுதளத்தில் விழுந்ததால் அவரை அடுத்து ஓடிய ஸ்பெயின் வீரர் ஒர்லான்டோ ஒர்டிகாவுக்கு இலக்கை நோக்கி முன்னேறுவதில் சற்று தடங்கல் ஏற்பட்டது. இதனால் அவர் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
ஒமார் மெக்லியோட் கீழே விழுந்த போது ஒர்லான்டோ 3-வது இடத்தில் இருந்ததாகவும், அவர் கீழே விழுந்ததால் ஏற்பட்ட இடையூறு காரணமாக தங்கள் வீரர் பதக்க வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் ஸ்பெயின் தடகள அணி நிர்வாகம் சார்பில் போட்டி அமைப்பாளர்களிடம் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீலை ஏற்றுக்கொண்ட உலக தடகள சம்மேளனம் ஒர்லான்டோவுக்கு வெண்கலப்பதக்கம் வழங்க அனுமதி அளித்தது.