TAMIL
எதிரணி வீரரை வைத்தே இந்திய அணியை காலி செய்த தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜோர்ன் பார்ச்சூன், சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை வீழ்த்துவதற்கு காரணமாக அமைந்தார். பெங்களூருவில் நடந்த 3வது டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, 17வது ஓவரிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
அந்த அணியில் குவிண்டன் டி காக் 52 பந்துகளில் 79 ஓட்டங்கள் விளாசினார். இந்தப் போட்டியில், முக்கியமான கட்டத்தில் இந்திய அணி வீரர்களான ரிஷாப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும், தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் பார்ச்சூன் கைப்பற்றினார்.
இதுவே ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் ஜோர்ன் பார்ச்சூன், இந்திய அணியை வீழ்த்த அபாரமாக திட்டம் போட்டு செயல்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் ட்விட்டரில் கிடைத்த சில தகவல்களை சேகரித்து, இந்திய அணிக்கு எதிராக தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவின் பந்துவீச்சு வீடியோக்களைப் பார்த்து, ஜோர்ன் பயிற்சி மேற்கொண்டுள்ளார் என ரசிகர் ஒருவர் ஆதாரத்தை காட்டுகிறார்.
Bjorn Fortuin's liked tweets from a few days ago. #INDvSA pic.twitter.com/qLdUkzVSep
— absy (@absycric) September 22, 2019
அதாவது, ஜோர்ன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் , ஒரு கிரிக்கெட் ரசிகரின் பதிவுகளை தொடர்ந்து Like செய்துள்ளார். அதில் இந்திய அணிக்கு எதிராக எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பது பற்றி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, ஜடேஜாவின் பந்துவீசும் முறை, எங்கே அவர் பீல்டிங்கை நிறுத்துகிறார், எத்தனை வேகத்தில் வீசுகிறார் என பாருங்கள், பின் அவற்றை போட்டிகளில் பயன்படுத்திப் பாருங்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் செப்டம்பர் 3ஆம் திகதி அன்று பதிவிடப்பட்டுள்ளது என்பதால், இவற்றை Like செய்த ஜோர்ன் கண்டிப்பாக பரிசோதித்து பார்த்திருப்பார் என்று கூறப்படுகிறது.