TAMIL
2-வது டி20 கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.
தென் ஆப்பிரிக்க அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டி காக்கும், ஹெண்ட்ரிக்ஸும் களம் இறங்கினர். ஹெண்ட்ரிக்ஸ் 6 ரன்களில் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய பவுமாவும், டிகாக்கும் இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்தனர். இதனால் ரன் வேகம் அதிகரித்தது. சைனி பந்தில் டி காக் ( 52 ரன்கள் , 37 பந்துகள்) ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் தென் ஆப்பிரிக்க அணியின் ரன்வேகம் குறைந்தது. பவுமா 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த வீரர்கள் சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை. அபாயகரமான பேட்ஸ்மேன் மில்லர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சஹர் 2 விக்கெட்டுகளையும் , சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில், ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 12(12) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ஷிகார் தவானுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்திய இந்த ஜோடியில் ஷிகார் தவான் 40(31) ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பாண்ட் 4(5) ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடி காட்டிய கோலி தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். அடுத்ததாக விராட் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச்சென்றனர்.
இறுதியில் விராட் கோலி 72(52) ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 16(14) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி19 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக போர்டுய்ன், பெலக்வாயோ மற்றும் ஷம்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.