TAMIL
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ரன்களும், ஆஸ்திரேலியா 225 ரன்களும் எடுத்தன.
69 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ரோரி பர்ன்ஸ் 20 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 21 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.
இதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஜோ டென்லியுடன், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அமைத்தார். இருவரும் அணியின் ஸ்கோரை வலுவான நிலையை நோக்கி பயணிக்க வைத்தனர்.
அணியின் ஸ்கோர் 214 ரன்களாக உயர்ந்த போது பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களில் (115 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) நாதன் லயனின் சுழலில் கிளன் போல்டு ஆனார். மறுமுனையில் இரண்டு முறை கண்டம் தப்பி தனது ‘கன்னி’ சதத்தை நெருங்கிய ஜோ டென்லி 94 ரன்களில் (14 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பேர்ஸ்டோ 14 ரன்னிலும், சாம் குர்ரன் 17 ரன்னிலும், வோக்ஸ் 6 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 47 ரன்னிலும் வெளியேறினர்.
ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 313 ரன்கள் சேர்த்து மொத்தம் 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்