மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் பஞ்சாப்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 195 ரன்கள் அடித்தது. பின்னர் சேஸிங் செய்த டெல்லி அணி எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தவான் 92 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
பஞ்சாப் அணிக்கெதிராக 92 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
டேவிட் வார்னர் 49 அரைசதம், 4 சதம் என 53 முறை 50-க்கும் மேல் அடித்து முதல் இடத்தில் உள்ளார். தவான் 43 அரைசதம், 2 சதம் என 45 முறை அடித்து 2-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 39 அரைசதம், 5 சதம் என 44 முறை 50-க்கு மேல் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 39 அரைசதம், 3 சதத்துடன் 42 முறை அடித்து 4-வது இடத்தில் உள்ளார்.
ரெய்னா 39 அரைசதம், ஒரு சதத்துடன் 5-வது இடத்திலும், ரோகித் சர்மா 39 அரைசதம், ஒரு சதத்துடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.