மும்பையில் நடந்த 8 வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்னே எடுக்க முடிந்தது.
தமிழக வீரர் ஷாருக்கான் அதிகபட்சமாக 36 பந்தில் 47 ரன் ( 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் வேகப்பந்து வீரர் தீபக்சாஹர் அபாரமாக பந்து வீசினார். அவர் 13 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். சாம் கர்ரண், மொய்ன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 26 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 107 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. அந்த அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மொய்ன் அலி 31 பந்தில் 46 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), டுபிளசிஸ் 33 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தனர். முகமது ஷமி 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்று இருந்தது.
இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் டோனி கூறியதாவது:-
பந்து வீச்சாளர்களால் இந்த வெற்றி கிடைத்தது. தீபக் சாஹர் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் ஒரு முதிர்ச்சி அடைந்த பவுலராக திகழ்ந்துள்ளார்.
அவரது பந்தில் டி.ஆர்.எஸ். கேட்குமாறு வலியுறுத்தினார். ஆனால் பந்து மேலே செல்வது தெளிவாக தெரிந்ததால் டி.ஆர்.எஸ்.கேட்கவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் விளையாடியதை நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இது ஒரு நீண்ட பயணம். 2008-ல் தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா, துபாய் என பயணம் நீண்டது.
தற்போது மும்பை எங்களது சொந்த மைதானமாக இருக்கிறது. மும்பை எங்களது ஆடுகளமாக மாறும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.
இவ்வாறு டோனி கூறி உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்சின் 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 19-ந் தேதி மும்பையில் எதிர்கொள்கிறது.
பஞ்சாப் அணி முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லியை 18-ந் தேதி (நாளை) எதிர்கொள்கிறது.