CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? நாளை 2-வது ஒருநாள் போட்டி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
3 ஒருநாள் போட்டி தொடரில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி புனேயில் நாளை (26-ந் தேதி) பகல்-இரவாக நடக்கிறது.
இந்த ஆட்டத்திலும் வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தவான், லோகேஷ் ராகுல், கேப்டன் வீராட் கோலி, குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
தங்களது முதல் ஆட்டத்திலேயே குர்னால் பாண்ட்யாவும், பிரசித் கிருஷ்ணாவும் புதிய சாதனை படைத்திருந்தனர்.
ஸ்ரேயாஷ் அய்யர் காயம் அடைந்து விலகி உள்ளதால், அவரது இடத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் அல்லது ரிஷப்பண்ட் ஆகியோரில் ஒருவர் ஸ்ரேயாஷ் அய்யர் இடத்தில் களம் இறங்கலாம். ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதால், ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு குறைவே.
ரிஷப்பண்ட் சமீப காலமாகவே சிறப்பாக ஆடி வருகிறார். இதனால் அவருக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் நிலையும் இருக்கிறது. அவர் இடம் பெற்றால் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார். ராகுலும் இருப்பார்.ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து அணி நிர்வாகம் இதுகுறித்து முடிவு செய்யும்.
இங்கிலாந்து அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏற்கனவே அந்த அணி டெஸ்ட், 20 ஓவர் தொடரை இழந்ததால், நாளைய ஆட்டத்தில் வெற்றிக்காக மிகவும் கடுமையாக போராடுவார்கள்.
இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், கேப்டன் மார்கன், பட்லர், மார்க் வுட், ஆதில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
கேப்டன் மார்கனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமே.
இரு அணிகளும் நாளை மோதுவது 102-வது ஆட்டம் ஆகும். இதுவரை நடந்த 101 போட்டியில் இந்தியா 54-ல், இங்கிலாந்து 42-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.