CRICKETLATEST UPDATESNEWSTAMIL

2007-ம் ஆண்டில் டோனிக்கு கேப்டன் பதவி கிடைத்தது எப்படி?- சரத்பவார் விளக்கம்

2007-ம் ஆண்டில் டோனிக்கு கேப்டன் பதவி கிடைத்தது எப்படி?- சரத்பவார் விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திரசிங் டோனி. இந்திய அணிக்கு 2 உலக கோப்பைகளை வென்று பெருமை சேர்த்தவர் டோனி. 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையும் அவரது தலைமையிலான அணி கைப்பற்றி முத்திரை பதித்தது.

மேலும் டோனி தலைமையில் 2013-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஐ.சி.சி. நடத்தும் அனைத்து தொடர்களின் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் டோனி ஆவார்.

கேப்டன் பதவி மட்டு மல்லாமல் பேட்டிங்கிலும் அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 2005-ல் அறிமுகமான அவர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.

இந்த நிலையில் டோனிக்கு கேப்டன் பதவி கிடைத்தது எப்படி என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத்பவார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

2007-ல் இந்திய அணி இங்கிலாந்து சென்றது நினைவில் இருக்கிறது. அப்போது ராகுல்டிராவிட்தான் கேப்டன். அப்போது நான் இங்கிலாந்தில் இருந்தேன். டிராவிட் என்னை சந்தித்தார்.

இந்திய அணியை வழி நடத்த முடியாதது பற்றி என்னிடம் அவர் தெரிவித்தார். கேப்டன் பொறுப்பு பேட்டிங்கை பாதிப்பது குறித்தும் தெரிவித்தார். இதனால் கேப்டன் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து தெண்டுல்கரிடம் அணியை வழிநடத்துமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். இருவரும் (தெண்டுல்கர், டிராவிட்) அணியை வழி நடத்த விரும்பாவிட்டால் என்ன செய்வது என்று தெண்டுல்கரிடம் கேட்டேன்.

எம்எஸ் டோனி- சரத்பவார்

இந்திய அணியை வழிநடத்துவதற்கு நம்மிடம் மேலும் ஒரு வீரர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை எம்.எஸ்.டோனி என்றார் தெண்டுல்கர். இதற்கு பிறகு டோனியிடம் கேப்டன் பதவியை வழங்கினோம்.

இவ்வாறு சரத்பவார் கூறினார்.

டோனி முதலில் 20 ஓவர் போட்டிக்கு கேப்டன் ஆனார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி, டெஸ்ட்டுக்கு கேப்டனாக இருந்தார். 2018 வரை அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தார்.

டோனி தலைமையில் இந்திய அணி 72 இருபது ஓவர் போட்டியில் விளையாடி உள்ளது. இதில் 41-ல் வெற்றி, 28-ல் தோல்வி கிடைத்தது. ஒரு ஆட்டம் டை ஆனது. 2 போட்டி முடிவில்லை.

200 ஓருநாள் போட்டியில் 110-ல் வெற்றி கிடைத்தது. 74 ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது. 5 ஆட்டம் டையில் முடிந்தது. 11 ஆட்டம் முடிவில்லை.

டோனி தலைமையில் இந்திய அணி 60 டெஸ்டில் விளையாடி உள்ளது. இதில் 27 போட்டியில் வெற்றி கிடைத்தது. 18-ல் தோல்வி ஏற்பட்டது. 15 ஆட்டம் டிரா ஆனது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker