CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு இன்று கூடுகிறது

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமாதாபாத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கிய அம்சமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. தற்போது ஐ.பி.எல்.ல் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கு தொடர்ந்து மவுசு அதிகரித்து வருவதால் அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.ஜி. உள்பட பல நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.

 

அடுத்த ஆண்டு (2021) ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டினாலும், புதிய அணிகளை டெண்டர் மூலம் முடிவு செய்வது, வீரர்கள் ஏலம், புதிய அணிகள் போட்டிக்கு தயாராகுவது ஆகியவற்றுக்கு போதிய கால அவகாசம் இல்லாததாலும், ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வருவதாலும், 2022-ம் ஆண்டு முதல் புதிய அணிகளை சேர்க்க முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டிகளை இந்தியாவில் நடத்துகையில் அதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. விடுத்து இருக்கும் காலக்கெடு குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. காலியாக இருந்த துணை தலைவர் பதவிக்கு ராஜீவ் சுக்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கும், ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் தலைவராக பிரிஜேஷ் பட்டேல் தொடருவதற்கும் அங்கீகாரம் அளிக்கப்படும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக யாரை பங்கேற்க வைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு வாரிய செயலாளர் ஜெய் ஷாவின் பெயர் முன்மொழியப்படும் என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கான 3 புதிய தேர்வாளர்களை தேர்வு செய்வதற்கு கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைப்பது, நடுவர்கள் கமிட்டி, டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால போட்டி தொடர்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஸ்பான்சர் நிறுவனத்துக்கு போட்டியாக விளங்கும் நிறுவனத்தின் விளம்பர தூதராக கங்குலி இருப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆலோசனை செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker