TAMIL

ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ந்து 21-வது வெற்றி

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மெக் லானிங், ஆல்-ரவுண்டர் எலிசி பெர்ரி காயம் காரணமாக ஆடாத நிலையிலும், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. பொறுப்பு கேப்டன் ராச்செல் ஹெய்ன்ஸ் 96 ரன்னும், அலிசா ஹீலே 87 ரன்னும் விளாசினர்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, 27 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை சுவைத்ததுடன், தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

அந்த அணி தொடர்ச்சியாக வென்ற 7-வது தொடர் இதுவாகும்.

ஆஸ்திரேலிய பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு அந்த அணி தோல்வியையே சந்திக்கவில்லை.

இதன் மூலம் 2003-ம் ஆண்டில் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய ஆண்கள் அணி தொடர்ந்து 21 ஆட்டங்களில் வென்று இருந்த சாதனையை சமன் செய்து அசத்தியது.

சாதனையை சமன் செய்த ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker