ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.
இதில் டெல்லி நிர்ணயித்த 197 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்து பணிந்தது.
இந்த போட்டியில் 43 ரன்கள் சேர்த்த பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி 10 ரன்களை எட்டிய போது ஒட்டுமொத்த 20 ஓவர்
கிரிக்கெட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர், சர்வதேச அளவில் 7-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
தோல்விக்கு பிறகு விராட் கோலி கூறுகையில், ‘டெல்லி அணி சிறப்பான தொடக்கம் கண்டது. மிடில் ஓவர்களில் அவர்களை நாங்கள் வெகுவாக கட்டுப்படுத்தினோம்.
ஆனால் கடைசி பகுதியில் (கடைசி 4 ஓவரில் 53 ரன் விட்டு கொடுத்தனர்) மீண்டும் கோட்டை விட்டு விட்டோம். கிடைக்கும் கேட்ச் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சிக்கலான கேட்ச்சுகளை விடுவது விஷயமல்ல.
ஆனால் கையில் வந்து விழும் சுலபமான கேட்ச் வாய்ப்புகளை தவற விடுவது வேதனை அளிக்கிறது.
மார்கஸ் ஸ்டோனிசுக்கு (30 ரன்னில் கேட்ச்சில் தப்பியவர் 53 ரன் விளாசினார்) மறுவாழ்வு கொடுத்தோம்.
அவர் ஆட்டத்தை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்து விட்டார்.’ என்றார்.