IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL

தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக மோர்கனை கேப்டனாக்க வேண்டும்: கொல்கத்தா ரசிகர்கள் விருப்பம்

சார்ஜாவில் நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது. கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 38 பந்தில் 88 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பிரித்வி ஷா 41 பந்தில் 66 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ரிஷப் பண்ட் 17 பந்தில் 38 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஆந்த்ரே ரஸ்சல் 2 விக்கெட்டும், வருன சக்கரவர்த்தி , நாகர் கோட்டி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்தது. இதனால் டெல்லி அணி 18 ரன்னில் வெற்றி பெற்றது. நிதிஷ் ராணா 35 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), மோர்கன் 18 பந்தில் 44 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), திரிபாதி 16 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஆன்ரிச் நோர்ட்ஜ் 3 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டும், ரபடா, ஸ்டாய்னிஸ், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி மூலம் டெல்லி அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தா அணி போராடி தோற்றது. அந்த அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார். அவரது ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. 4 இன்னிங்சில் 37 ரன்களே எடுத்துள்ளார்.

அவர் நேற்றைய ஆட்டத்தில் மோர்கனுக்கு முன்பு களம் இறங்கியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டனான மோர்கன் 5 சிக்சர்களை விளாசினார். அவர் கடைசி ஓவர் வரை களத்தில் நின்று இருந்தால் கொல்கத்தா வெற்றி பெற்று இருக்கும்.

கொல்கத்தா அணியின் இந்த தோல்வியை தொடர்ந்து தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கொல்கத்தா ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

உலக கோப்பை வெற்றி கேப்டனான மோர்கனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிப்பது தற்போதைய சூழ்நிலைக்கு உகந்தது என்று அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே கொல்கத்தா அணி தொடக்கத்தில் தோல்வியை அடையும்போது, தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு, மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று டெலிவிஷன் வர்ணனையாளரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கவாஸ்கர் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோர்கன் இந்த ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக ஆடி வருகிறார். 4 ஆட்டத்தில் 136 ரன்கள் எடுத்துள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker