
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது.
இதில் மும்பை நிர்ணயித்த 192 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுத்து 3-வது தோல்வியை தழுவியது.
தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘இந்த தோல்வி வெறுப்பளிக்கிறது என்று சொல்லமாட்டேன்.
ஆனால் ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 4 ஆட்டங்களில் மூன்றில் நாங்கள் எளிதாக வெற்றி பெற்று இருக்க முடியும்.
இந்த ஆட்டத்தில் இறுதி கட்டத்தில் (கடைசி 5 ஓவர்களில் 89 ரன்களை விட்டுக்கொடுத்தனர்) நாங்கள் சரியாக பந்து வீசவில்லை.
நாங்கள் சில தவறுகளை இழைத்தோம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வலுவாக திரும்ப வேண்டும். மற்றொரு பந்து வீச்சாளர் அல்லது ஆல்-ரவுண்டர் அணியில் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்ப்பதா? அல்லது இதே அணியுடன் தொடருவதா? என்பது குறித்து பயிற்சியாளருடன் கலந்து பேசி முடிவு செய்வோம்’ என்றார்.