* ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.
அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கே.எம்.ஆசிப் கொரோனா பாதுகாப்பு வளையத்தை மீறியதாகவும், அதனால் அவர் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆசிப் தனது அறை சாவியை தொலைத்து விட்டதால் மாற்று சாவி கேட்டுள்ளார். அவர் வழக்கமான ஓட்டல் ஊழியர்களை சந்தித்து சாவியை கேட்கவில்லை.
எங்களுக்காக தனியாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஊழியர்களிடம் தான் கேட்டுள்ளார். இந்த விஷயத்தை தேவையில்லாமல் பெரிதுப்படுத்தி இருக்கின்றனர்.
கொரோனாவின் தன்மையை அறிந்து நாங்கள் எல்லோரும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறோம். வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தனியாக பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர்.
அவர்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு நானே சென்றதில்லை. ஆசிப் உள்பட எல்லா வீரர்களும் இதுவரை 14 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்’ என்றார்.
* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்கு வசதியாக இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் டெல்லியில் வருகிற 5-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த பயிற்சி முகாம் மறுதேதி குறிப்பிடப்படாமல் நேற்று தள்ளிவைக்கப்பட்டது. நிர்வாக நிர்ப்பந்தம் காரணமாக பயிற்சி முகாம் தள்ளிபோடப்பட்டு இருப்பதாக இந்திய ரைபிள் சங்க செயலாளர் ராஜீவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.
* துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-வது ஓவரில் பீல்டிங் செய்கையில் ராஜஸ்தான் அணி வீரர் ராபின் உத்தப்பா எச்சிலை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால் ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக எச்சிலை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்க ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.
ஒரு இன்னிங்சில் இரண்டு முறைக்கு மேல் எந்த அணி வீரராவது பந்து மீது எச்சிலை தேய்த்தால் அந்த அணிக்கு 5 ரன் அபராதமாக விதிக்கலாம்.
அந்த ரன் எதிரணிக்கு போனசாக கிடைக்கும்.
அத்துடன் அந்த பந்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகே மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று நடத்தை விதிமுறையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.