ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் அபுதாபியில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை வீழ்த்தியது.
இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுக்க, இந்த இலக்கை கொல்கத்தா அணி 18 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
தோல்விக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், ‘நான் (36 ரன்) ரொம்ப சுலபமாக மோசமான ஷாட்டுக்கு அவுட் ஆகி விட்டேன்.
அதுவும் ரன்வேகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்திய சமயத்தில் வீழ்ந்து விட்டேன். அதனால் யாரையும் நான் குற்றம் சாட்டமாட்டேன். போதிய ரன் எடுக்க முடியாமல் போனதற்காக நானே முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். மிடில் ஓவர்களில் இன்னும் கொஞ்சம் வேகம் காட்டியிருக்கலாம். நான் வெளியேறிய பிறகு 4-5 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தோம். இந்த ஓவர்களில் நிறைய பவுண்டரிகளை விளாச முயற்சித்திருக்க வேண்டும். அத்துடன் நிறைய பந்துகளை விரயமாக்கியது மிகவும் ஏமாற்றம் அளித்தது. 35-36 பந்துகளில் (டாட் பால்) ரன்னே எடுக்கவில்லை என்பதை 20 ஓவர் கிரிக்கெட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.