7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை கோவாவில் நடக்கிறது. அங்குள்ள மூன்று மைதானங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், வழக்கமாக சென்னையின் எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, மும்பை சிட்டி, பெங்களூரு எப்.சி. உள்பட 10 அணிகள் பங்கேற்கும். இந்த ஆண்டு ஐ.எஸ்.எல். போட்டியில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்பட்டு உள்ளது. 11-வது அணியாக ஈஸ்ட் பெங்கால் அணி இணைய இருப்பதாக கால்பந்து விளையாட்டு வளர்ச்சி கழக தலைவர் நிதா அம்பானி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஈஸ்ட் பெங்கால் கிளப்பின் பெரும்பான்மையான பங்குகளை ஸ்ரீ சிமென்ட் பவுண்டேசன் வாங்கியுள்ளது.
அதிகமான கால்பந்து ரசிகர்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் இருந்து ஐ.எஸ்.எல்.-ல் அடியெடுத்து வைக்கும் 2-வது அணி ஈஸ்ட் பெங்கால் ஆகும். ஏற்கனவே பங்கேற்று வரும் அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணியுடன் பழமைவாய்ந்த மோகன் பகான் கிளப் இணைந்து இந்த முறை ஒருங்கிணைந்த அணியாக களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.