IPL TAMILTAMIL

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி முதல் வெற்றி ஐதராபாத்தை வீழ்த்தியது

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு அபுதாபியில் நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மல்லுக்கட்டின.

கொல்கத்தா அணியில் சந்தீப் வாரியர், நிகில் நாயக் நீக்கப்பட்டு வருண் சக்ரவர்த்தி, கம்லேஷ் நாகர்கோட்டி சேர்க்கப்பட்டனர்.

ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ், விஜய் சங்கர், சந்தீப் ஷர்மா ஆகியோருக்கு பதிலாக முகமது நபி, விருத்திமான் சஹா, கலீல் அகமது இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அடியெடுத்து வைத்தனர்.

கொல்கத்தா பவுலர்கள் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் அவர்களை தடுமாற வைத்தனர்.

குறிப்பாக முந்தைய ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்த ஆட்டத்தில் பிரமாதமாக பந்து வீசினார்.

அவரது பந்து வீச்சில் பேர்ஸ்டோ (5 ரன், 10 பந்து) கிளீன் போல்டு ஆனார். அடுத்து மனிஷ் பாண்டே வந்தார்.

மறுமுனையில் வார்னர் (36 ரன், 30 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண்சக்ரவர்த்தியின் பந்து வீச்சில் அவரிடமே பிடிப்பட்டார்.

இதைத் தொடர்ந்து மனிஷ் பாண்டேவுடன், விருத்திமான் சஹா இணைந்தார். முதல் 10 ஓவர்களில் ரன்ரேட் 6 ரன் வீதம் என்று மந்தமாகவே நகர்ந்தது.

இதன் பின்னர் இருவரும் ரன்வேகத்தை அதிகரிக்க முடிந்தவரை முயற்சித்தனர். ஆனால் பெரிய அளவில் தடாலடி பேட்டிங்கை பார்க்க முடியவில்லை.

பாண்டே தனது பங்குக்கு 51 ரன்கள் (38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்ச) எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

சஹா 30 ரன்களில் (31 பந்து) ரன்-அவுட் ஆனார்.

20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, ரஸ்செல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 143 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் நிலைத்து நின்று ஆடினார்.

மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரின் (0), அடுத்து வந்த நிதிஷ் ராணா (26 ரன்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (0) குறுகிய இடைவெளியில் வெளியேறினர்.

ரஷித்கான் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆன தினேஷ் கார்த்திக், டி.ஆர்.எஸ். படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

இதைத் தொடர்ந்து சுப்மான் கில்லும், இயான் மோர்கனும் கைகோர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

அபாரமாக ஆடிய சுப்மான் கில் அரைசதம் விளாசினார்.

மோர்கன் சிக்சர், பவுண்டரியுடன் இலக்கை எட்ட வைத்தார்.

கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுப்மான் கில் 70 ரன்களுடனும் (62 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), மோர்கன் 42 ரன்களுடனும் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

கொல்கத்தா அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் தோற்று இருந்தது.

அதே சமயம் நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியான ஐதராபாத்துக்கு இது 2-வது தோல்வியாகும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker