IPL TAMILTAMIL

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி முதல் வெற்றி கொல்கத்தாவை பந்தாடியது

8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு அபுதாபியில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது.

‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் மும்பையை பேட் செய்ய பணித்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் குயின்டான் டி காக் (1 ரன்) ஷிவம் மாவியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் கேப்டன் ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து, எதிரணியின் பந்து வீச்சை பின்னியெடுத்தனர்.

சந்தீப் வாரியரின் ஓவரில் சூர்யகுமார் 4 பவுண்டரி சாத்தினார்.

வேகப்பந்து வீச்சாளர் கம்மின்சின் ஓவரில் இரு பிரமாதமான சிக்சர்களை பறக்க விட்டு ரோகித் சர்மாவும் ரன்வேட்டையை துரிதப்படுத்தினார்.

இதனால் அவர்களின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அணியின் ஸ்கோர் 98 ரன்களாக உயர்ந்த போது சூர்யகுமார் யாதவ் (47 ரன், 28 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.

அடுத்து வந்த சவுரப் திவாரி 21 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில் 37-வது அரைசதத்தை கடந்து தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ரோகித் சர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட

வேளையில் 80 ரன்களில் (54 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

ஷிவம் மாவி புல்டாசாக வீசிய பந்தை தூக்கியடித்த போது சிக்கினார்.

பின்னர் ஹர்திக் பாண்ட்யா (18 ரன்), பொல்லார்ட் (13 ரன், நாட்-அவுட்) ஆகியோரின் கடைசிகட்ட பங்களிப்புடன் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா தரப்பில் ஷிவம் மாவி 2 விக்கெட்டும், சுனில் நரின், ரஸ்செல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஏலத்தில் ரூ.15½ கோடிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 3 ஓவர்களில் 49 ரன்களை அள்ளி கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.

அடுத்து 196 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, பும்ரா, டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் உள்ளிட்ட மும்பை பவுலர்களின்

துல்லியமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.

அபாயகரமான பேட்ஸ்மேன்களான ஆந்த்ரே ரஸ்செல் (11 ரன்), மோர்கன் (16 ரன்) ஜொலிக்கவில்லை.

அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 சிக்சருடன் 33 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் எடுத்தனர்.

கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 146 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோற்று இருந்தது.

ரோகித் சர்மா 200 சிக்சர்

* மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் அடித்த 6 சிக்சர்களையும் சேர்த்து அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது.

ஐ.பி.எல். வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

அதிக சிக்சர் விளாசியவர்களில் கிறிஸ் கெய்ல் (326 சிக்சர்), டிவில்லியர்ஸ் (214), டோனி (212) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

* ஐ.பி.எல்.-ல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நேற்று படைத்தார். அவர் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 904 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.

இந்த வகையில் 2-வது இடத்தில் உள்ள ஐதராபாத் கேப்டன் வார்னர் கொல்கத்தாவுக்கு எதிராக 829 ரன்கள் எடுத்துள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker