ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இலக்கை நோக்கி ஆடுகையில் அந்த அணி வீரர் மயங்க் அகர்வால் 19-வது ஓவரில் 3-வது பந்தை அடித்து விட்டு ஓடினார்.
அவரும் மறுமுனையில் இருந்த கிறிஸ் ஜோர்டானும் ஓடி 2 ரன்கள் சேர்த்தனர்.
ஆனால் கிறிஸ் ஜோர்டான் மறுமுனையின் கிரீசை சரியாக தொடாமல் 2-வது ரன்னுக்கு ஓடியதாக நடுவர் நிதின் மேனன் தெரிவித்தார்.
அத்துடன் இரண்டு ரன் அளிக்க முடியாது என்று மறுத்ததுடன் அதனை ஒரு ரன்னாக குறைத்து வழங்குவதாக அறிவித்தார்.
ஆனால் டி.வி.ரீபிளேயில் கிறிஸ் ஜோர்டான் தனது பேட்டால் கிரீசை நன்றாக தொட்டபடி அடுத்த ரன்னுக்கு திரும்புவது தெளிவாக தெரிந்தது.
நடுவர் மட்டும் அந்த ஒரு ரன்னை மறுக்காமல் இருந்து இருந்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இருக்கலாம். நடுவரின் இந்த தவறான முடிவு பஞ்சாப் அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தியது.
நடுவரின் முடிவுக்கு முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சர்ச்சை குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தனது டுவிட்டர் பதிவில், ‘ஆட்டநாயகன் தேர்வை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்.
ஒரு ரன்னை குறைத்த நடுவருக்கு தான் அந்த ஆட்டநாயகன் விருதை வழங்கி இருக்க வேண்டும்.
அந்த ஒரு ரன் தான் ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ‘ஒரு ரன் குறைத்து வழங்கியது தவறான முடிவாகும்’ என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நடுவரின் முடிவை எதிர்த்து பஞ்சாப் அணி சார்பில் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத்திடம் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாப் அணியின் தலைமை செயல் அதிகாரி சதீஷ் மேனன் கூறுகையில், ‘நடுவரின் முடிவு குறித்து போட்டி நடுவரிடம் அப்பீல் செய்து இருக்கிறோம். மனித தவறுகள் நடக்க தான் செய்யும். ஆனால் உலகத்தரம் வாய்ந்த ஐ.பி.எல். போட்டியில் இதுபோன்ற மனித தவறுகளுக்கு இடம் அளிக்கக்கூடாது. இந்த முடிவால் எங்களது ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு கூட பாதிக்கப்படலாம். தோல்வி, தோல்வி தான் என்றாலும், நடுவரின் இந்த முடிவு நியாயமற்றது. விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார்.