TAMIL

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளருக்கு கொரோனா – உதவியாளர்கள் சிலரும் பாதிப்பு

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி 8 அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் அங்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்களும் அமீரகம் வந்த வண்ணம் உள்ளனர்.

‘அமீரகம் சென்றதும் ஓட்டலில் கட்டாயம் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அப்போது 1, 3, 6-வது நாட்களில் என்று மொத்தம் 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

எப்போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மூன்று சோதனையிலும் தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகே ஒன்றாக பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.’

என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் ஆகும்.

அது மட்டுமின்றி விமான நிலையத்திலும் தனியாக பரிசோதனை செய்யப்படுகிறது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த 21-ந்தேதி துபாய் சென்றனர்.

6 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்து சென்னை அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக அந்த அணியில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

கடைசிகட்ட பரிசோதனையில் இந்திய அணிக்காக சமீபத்தில் விளையாடிய வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும், அணியின் உதவியாளர்கள், வலை பயிற்சி பவுலர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த எண்ணிக்கை 12 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சென்னை அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோர் மட்டுமே இந்திய அணிக்காக ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சென்னை அணிக்குரிய தனிமைப்படுத்தும் நாட்கள் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் அவர்கள் தொடர்ந்து ஓட்டலிலேயே முடங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால் பயிற்சியை தொடங்குவதில் காலதாமதமாகும். பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து ‘நெகட்டிவ்’ முடிவு கிடைத்த பிறகே மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முடியும். இது சென்னை அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் மற்ற அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டனர்.

ஐ.பி.எல். தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் முழுமையாக உள்ளன. அதனால் தற்போதைய கொரோனா தாக்கத்தால் போட்டியை நடத்துவதில் பெரிய அளவில் சிக்கல் ஏதும் இருக்காது. இது போன்று கொரோனாவினால் யாராவது பாதிக்கப்பட்டால் அதற்கு ஏற்ற வகையில் அணிகளின் ஆட்டங்களை மாற்றம் செய்ய வசதியாகத் தான் இதுவரை போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker