TAMIL
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது இன்னிங்சில் சாதிப்பது எப்படி? முகமது ஷமி பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
எச்சிலால் பந்தை தேய்த்து அதை தொடர்ந்து பளபளப்பாக்குவதன் மூலம் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடிகிறது.
கொரோனா அச்சம் காரணமாக பந்து மீது எச்சிலை தேய்க்க ஐ.சி.சி. தடை விதித்திருப்பதால் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இனி பவுலர்கள் வேறு விதமாக தயாராக வேண்டியது அவசியம்.
இந்த விதிமுறை நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. என்றாலும் புதிய விதிமுறைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இது பந்து வீச்சாளர்களுக்கு சற்று பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.
எனவே ஆடுகளத்தை கொஞ்சம் பந்து வீச்சாளர்களுக்கு உகந்த வகையில் அமைக்கலாம்.
ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து பந்து வீசுவது நான் செய்த அதிர்ஷ்டம். அவர் வேகத்துடன் பந்தை துல்லியமாக வீசக்கூடியவர். பந்து வீச்சு குறித்து களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் நிறைய பேசிக் கொள்கிறோம்.
ஒருவருக்கொருவர் பலத்தை நன்கு புரிந்து வைத்திருப்பதுடன், சூழ்நிலைக்கு தகுந்தபடி பந்து வீசுகிறோம்.
பும்ரா அற்புதமான ஒரு பவுலர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
2-வது இன்னிங்ஸ்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது இன்னிங்சில் அதிகமாக சாதிப்பது குறித்து கேட்கிறீர்கள். 2-வது இன்னிங்சை நான் மிகவும் சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டு இறுதியில் விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்தேன்.
இத்தனைக்கும் ஆடுகளத்தில் பவுன்சே இல்லை. எத்தகைய சூழ்நிலை நிலவினாலும் அதை சாதகமாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பது முக்கியம்.
வழக்கமாக, 2-வது இன்னிங்சில் ஒவ்வொருவரும் சோர்ந்து போய் இருக்கும் போது எனக்குள் உற்சாகமும், வேகமும் பிறக்கும். நான் டீசல் என்ஜின் மாதிரி.
வேகமெடுப்பதில் பெட்ரோல் என்ஜினுடன் ஒப்பிடும் போது டீசல் என்ஜின் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். ஒவ்வொருவரும் களைப்படையும் வரை பொறுமை காப்பேன்.
இது 5 நாள் கொண்ட போட்டி என்பதால் கடைசி கட்டத்தில் மற்றவர்கள் சோர்ந்ததும் நான் விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் உத்வேகம் அடைந்து விடுகிறேன்.
உலகின் சிறந்த பவுலிங்
இப்போது இந்திய அணியில் நான், பும்ரா, இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ் என்று 5 வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்றாக அசத்தி வருகிறோம்.
ஒரே நேரத்தில் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல நிலையில் துடிப்புடன் செயல்படுவது மற்ற எந்த அணிகளிலும் இல்லாத ஒன்று.
இப்போது மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் பார்த்தால் இதுவே மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியாக இருக்கக்கூடும்”இவ்வாறு ஷமி கூறினார்.
29 வயதான முகமது ஷமி இதுவரை 49 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார். இதில் முதல் இன்னிங்சில் 92 விக்கெட்டுகளும், 2-வது இன்னிங்சில் 88 விக்கெட்டுகளும் சாய்த்து இருக்கிறார்.
ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை 5 முறை வீழ்த்தி உள்ளார்.
இச்சாதனையை 2-வது இன்னிங்சில் மட்டும் 4 முறை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.