TAMIL
இருப்பிடம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்காததால் புஜாரா உள்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் போட்டியின் போதும், போட்டி இல்லாத காலங்களிலும் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்கிற விவரத்தை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு 3 மாதங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் ஊக்க மருந்து பரிசோதனைக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் சில வீரர்கள் தாங்கள் இருக்கும் இடம் குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு சரியான தகவலை அளிக்கவில்லை.
இதில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர், வீராங்கனைகளும் அடங்குவார்கள்.
தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் விதிமுறையை முறையாக கடைப்பிடிக்க தவறிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புஜாரா,
லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இது குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் டைரக்டர் ஜெனரல் நவின் அகர்வால் கூறுகையில், ‘தேசிய ஊக்க மருந்து
தடுப்பு முகமையால் கேட்கப்படும் எங்கு இருக்கிறேன்? என்பது குறித்த விவரத்தை வீரர்கள் இரண்டு வழிகளில் பூர்த்தி செய்யலாம். சம்பந்தப்பட்ட வீரரே அதனை எங்கள் இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம்.
அல்லது வீரர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட விளையாட்டு அமைப்பு விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.
சில விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இணையதளத்தில் இந்த விவரங்களை பதிவிடுவது எப்படி என்பது தெரியாமல் கூட இருக்கலாம்.
எனவே இந்த விவரங்களை அளிக்கும் பொறுப்பை விளையாட்டு சம்மேளனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இதேபோல் தான் கிரிக்கெட் வீரர்களுக்கான இந்த பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் இதனை பூர்த்தி செய்ய தகுதி படைத்தவர்கள் என்றாலும் நேரமின்மை உள்பட சில காரணங்களால் அவர்களுக்கான இந்த பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்று செய்து வருகிறது.
இணையதள நடைமுறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீரர்கள் இருப்பிடம் குறித்த விவரத்தை தெரிவிப்பதில் காலதாமதமாகி
விட்டது என்றும் தற்போது அந்த பிரச்சினை தீர்ந்து விட்டது என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்து இருக்கிறது.
இந்த விளக்கம் குறித்து நாங்கள் ஆலோசித்து முடிவு செய்வோம்’ என்றார்.
வீரர் ஒருவர் 3 முறை தனது இருப்பிடம் குறித்த தகவலை முறைப்படி தெரிவிக்க தவறினால் அந்த வீரருக்கு 2 ஆண்டுகள் வரை தடை
விதிக்க ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையில் இடம் இருக்கிறது என்பது நினைவு கூரத்தக்கது.