TAMIL
100-வது சதம் அடிக்க விடாமல் தெண்டுல்கரை ‘அவுட்’ செய்ததால் கொலை மிரட்டல்கள் வந்தன – இங்கிலாந்து வீரர் பிரிஸ்னன்
லண்டன், ‘100-வது சதம் அடிக்க விடாமல் தெண்டுல்கரை ஆட்டம் இழக்க செய்ததால் தக்கு கொலை மிரட்டல்கள் வந்தன‘ என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரிஸ்னன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது 99-வது சர்வதேச சதத்தை 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அடித்தார்.
இதனால் அவர் எப்போது தனது 100-வது சதத்தை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அபரீதமாக இருந்தது.
அதே ஆண்டில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் 100-வது சதத்தை பூர்த்தி செய்ய நல்ல வாய்ப்பு உருவானது.
ஆனால் அது மயிரிழையில் கைநழுவிப்போனது. தெண்டுல்கர் 91 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரிஸ்னன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டை இழந்தார்.
பவுலரின் அப்பீலை தொடர்ந்து நடுவர் ராட் டக்கெர் (ஆஸ்திரேலியா) தெண்டுல்கருக்கு ‘அவுட்‘ வழங்கினார்.
ஆனால் அப்போது அது துல்லியமான எல்.பி.டபிள்யூ. இல்லை என்று சர்ச்சையானது.
ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கரை சதம் அடிக்க விடாமல் ஆட்டம் இழக்க செய்த பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன
என்று இங்கிலாந்து அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கும் 35 வயதான வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரிஸ்னன் நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் திறந்து இருக்கிறார்.
இது தொடர்பாக பிரிஸ்னன் கிரிக்கெட் இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘ஓவல் டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் நிச்சயம் சதம் அடித்து இருப்பார். நான் வீசிய அந்த பந்து அநேகமாக லெக் ஸ்டம்புக்கு வெளியே தான் போய் இருக்கும்.
நான் சத்தமாக அப்பீல் கேட்டதால் நடுவரும் அவுட் கொடுத்து விட்டார். நாங்கள் அந்த டெஸ்ட் போட்டி தொடரை வென்றதுடன், ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடித்தோம்.
அந்த போட்டிக்கு பிறகு எனக்கு ‘டுவிட்டர்’ மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதேபோல் நடுவர் ராட் டக்கெர் அதிகமான கொலை மிரட்டல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இதனை அவர் சில மாதங்களுக்கு பிறகு என்னை சந்தித்த போது கூறினார்.
‘எவ்வளவு தைரியம் இருந்தால் ஸ்டம்புக்கு வெளியே போகும் பந்துக்கு அவுட் கொடுப்பாய்‘ என்று அவரது வீட்டு விலாசத்துக்கு பலரும் கடிதம் எழுதி இருக்கின்றனர்.
இதனால் அவர் சில காலம் தனக்கு ஒரு பாதுகாவலரை நியமித்ததுடன், தனது வீட்டுக்கும் போலீஸ் காவல் போட்டு இருந்தார்‘ என்று தெரிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தெண்டுல்கர் முன்னதாக 2012-ம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தனது 100-வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.
டெஸ்ட் போட்டியில் 51 சதமும், ஒருநாள் போட்டியில் 49 சதமும் அடித்துள்ள தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.