TAMIL

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது இனவெறி பிரச்சினையை எதிர்கொண்டேன் – டேரன் சேமி புகார்

அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. விளையாட்டு பிரபலங்களும் சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி, கருப்பு இனத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு,

‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.), மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இது போன்ற இனவெறி சம்பவத்துக்கு ஆதரவு அளிப்பது போல் ஆகி விடும்.

இது அமெரிக்கா சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. இந்த பிரச்சினை தினந்தோறும் நடக்கிறது’ என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது தன்னிடம் இனவெறி பாகுபாடு காட்டப்பட்டதாக 36 வயதான டேரன் சேமி புதிய புகார் ஒன்றை சொல்லியுள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘ஐ.பி.எல்.-ல் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய போது என்னையும், இலங்கை வீரர் திசரா பெரேராவையும் ‘கலு’ என்றே அழைப்பார்கள்.

அப்போது இந்த வார்த்தைக்கு அர்த்தம் கருப்பு நிறத்தை சேர்ந்த வலுவான மனிதர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

பிறகு அது கருப்பு இனத்தை கிண்டல் செய்ய கூறப்படும் வார்த்தை என்று அறிந்ததும் இப்போது கோபம் தான் வருகிறது’ என்று குறிப்பிட்டார்.

2013, 2014-ம் ஆண்டுகளில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக களம் இறங்கிய டேரன் சேமி தன்னை இவ்வாறு கேலி செய்தது சக வீரர்களா அல்லது ரசிகர்களா, எப்போது அது நடந்தது போன்ற விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker