TAMIL
20 ஓவர் உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட தயார் – ஸ்டீவன் சுமித் பேட்டி
16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
வருகிற 10-ந் தேதி டெலிகான்பரன்ஸ் மூலம் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போர்டு பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த போட்டியை நடத்தலாமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட்டால், அந்த காலகட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) கொரோனா அச்சுறுத்தல்
காரணமாக ஏற்கனவே காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் சத்தமின்றி காய் நகர்த்தி வருகிறது.
கொரோனா அச்சம் காரணமாக மார்ம் மாதம் மத்தியில் இருந்து வீட்டிலேயே முடங்கி கிடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்
முன்னணி பேட்ஸ்மேனான ஸ்டீவன் சுமித், சிட்னி மைதானத்தில் நேற்று தனது பயிற்சியை தொடங்கினார்.
இதேபோல் டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்களும் பூட்டிய மைதானத்தில் மருத்துவ பாதுகாப்பு
நடைமுறைகளை பின்பற்றி தங்கள் பயிற்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
பயிற்சிக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒருநாள் அல்லது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது நாட்டுக்காக எப்பொழுது விளையாடுகிறோமோ? அது தான் உச்சபட்சம் என்று நான் கருதுகிறேன்.
எனவே நான் உலக கோப்பை போட்டியில் விளையாடவே முன்னுரிமை அளிப்பேன்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படும் பட்சத்தில், ஐ.பி.எல். போட்டி நடந்தால் அந்த போட்டியில் விளையாட நான் தயார்.
உள்ளூர் போட்டிகளில் ஐ.பி.எல். போட்டி சிறப்பானதாகும்.
தற்போதைய சூழ்நிலையில் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை.
வீரர்களான எங்களுக்கு என்ன சொல்லப்படுகிறதோ? அதன்படி செயல்பட்டு வருகிறோம்.
உலக கோப்பை போட்டி குறித்து தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சிந்திக்கவில்லை. நிபுணர்கள் மற்றும் அரசு சொல்லும் அறிவுரையின் படி நாங்கள் நடப்போம்.
கிரிக்கெட்டில் பேட்டுக்கும், பந்துக்கும் இடையே நியாயமான போட்டி இருக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் விரும்புபவன்.
பந்தை பளபளக்க செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதித்து எடுக்கப்பட்டு இருக்கும் முடிவு சரியானது கிடையாது.
இதனை சமாளிக்க மாற்று வழிகளை கண்டுபிடிப்பது என்பது கடினமானது தான்.
இருப்பினும் இதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொறுப்பாகும்.
முதல்முறையாக தொடங்கப்பட்டு இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை தொடர வேண்டும்.
அடுத்த ஆண்டில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக முடிவடையும் என்று நம்புகிறேன்.
ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக நான் பேட்டை கையில் எடுக்கவில்லை.
இருப்பினும் என்னை மேலும் வலுவாக்க கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தினேன்.
தற்போது நான் சிறப்பான உடல் தகுதியுடன் இருக்கிறேன்.
ஊடரங்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும், இந்த நீண்ட இடைவெளி நல்ல புத்துணர்ச்சியை பெற உதவிகரமாக இருந்தது.
பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை விட நாங்கள் அதிகமாக விளையாடி இருக்கிறோம்.
எனவே இந்தியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டி எங்களுக்கு சற்று கூடுதல் அனுகூலமாக இருக்கும் என்று அவர் கூறினார்.